சென்னை: திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் ஸ்டாலினை நடிகர் விஜய் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து, அவரது சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுப் பதவியில் உள்ளவர்கள், அரசியல் தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெட்ஜ் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. இந்த படத்தின் பாடல்கள், டிரைலர் ஆகியவை பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளன. ஆனால், இந்த படத்தில் ஒரு மதத்தினரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக பாமக மற்றும் சில இஸ்லாமிய கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. ஏற்கனவே பீஸ்ட் படத்துக்கு துபாய் தடை விதித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், நேற்று இரவு திரைப்பட தயாரிப்பாளர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து பரபரப்பு அறிக்கை வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை, மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும், இயக்கத்தினர் வெளியிடக் கூடாது.

இது நம் விஜய்யின் கடுமையான உத்தரவின்பேரில், ஏற்கெனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம். இருப்பினும், நம் விஜய் அறிவுறுத்தலை, மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தைவிட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.