டெல்லி: பண மோசடி வழக்கில், சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு சொந்தமான ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அமலாக்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வலது கரமாக செயல்பட்டு வருபவர் சஞ்சய் ராவத். சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். பாஜகவுடனான கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியதில் இருந்து, ராவத் பாஜகவுக்கு எதிராக செயலாற்றி வந்தார். மோடி அரசை கடுமையாக சாடி வருவதுடன், பாஜகவுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், தொழிலாளர் குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறையினர், இதில், சுமார் 1,034 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்டதை கண்டறிந்தது. விசாரணையில், இதில், சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், தொழிலதிபர் பிரவீன் ராவத் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள்மீது, பணமோசடி வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நில மோசடியில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத்தின் மனைவி வர்ஷா ராவுத்திடமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏற்கெனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும், எச்.டி.ஐ.எல் நிறுவனர் ராகேஷ் வாதாவன், சரங் வதாவன் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பிரவின் ராவுத் தன் மனைவி வங்கிக் கணக்கு மூலம் சஞ்சய் ராவுத் மனைவி வர்ஷாவிற்கு ரூ.55 லட்சம் கொடுத்ததாக கண்டுபிடித்துள்ளது. அதேபோல, சஞ்சய் ராவுத், அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானம், ஹோட்டல்களில் ரூம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில், சஞ்சய் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 8 சொத்துக்கள் பறிமுதல் செய்வதாக அறிவித்து உள்ளது. மும்பையை அடுத்த அலிபாக் நகரில் உள்ள நிலங்கள் மற்றும் தாதர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்பட 1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர்.
பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களில், அலிபாக்கில் உள்ள ரூ.9 கோடி மதிப்பிலான நிலங்கள் மற்றும் இது தவிர சஞ்சய் ராவுத் மனைவிக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான வீடும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் ராவுத், “எனது சொத்துகளை பறிமுதல் செய்யுங்கள், என்னை துப்பாக்கியால் சுடுங்கள், என்னை சிறையில் போடுங்கள் நான் பயப்படமாட்டேன். நான் பாலாசாஹேப் தொண்டன். எதையும் எதிர்த்துப் போராடுவேன் என்று கூறியுள்ளார்.