டெல்லி: தலைநகர் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில், திமுக அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயத்தை திறந்தவைத்தார்.

டெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்ணா கலைஞர்  அறிவாலயம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்டும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஜூனில் தொடங்கி டிசம்பரில் கட்டிமுடிக்கப்பட்டது, செட்டிநாடு கட்டட முறையில் கட்டப்பட்டுள்ள  இந்த கட்டிடத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் மாலை 5மணி அளவில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர கொடிக் கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார்.

பின்னர் கலைஞர் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு திறந்து வைத்தார்.

திமுக அலுவலகத்தில் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா குத்துவிளக்கு ஏற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி.க்கள், தமிழ்நாடு அமைச்சர்கள் உள்பட முக்கிய திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மூத்த கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.