நெல்லை: தென்காசி திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலுக்கு பேருந்து சேவையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அத்துடன் அந்த பேருந்தில், பயணம் செய்து கோவிலுக்கு சென்றார்.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் வகையில் இரண்டு பேருந்து சேவைகள் தொடங்கப் பட்டுள்ளது.

கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் மட்டுமே சென்று வந்தன. இந்நிலையில் உபயதாரா் அருணா சலம் மூலமாக இரண்டு பேருந்துகள் கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதைக்கொண்டு, மலை அடிவாரத்தில் இருந்து கோயில் வரை இந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இப்பேருந்து சேவையினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.