கொழும்பு: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா கடன்உதவி வழங்கியுள்ளதுடன், ஏற்கனவே கூறியபடி,  40 ஆயிரம் டன் டீசலை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அந்த டீசல் அங்கு சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியகி உள்ளது.

இலங்கையின் பொருளதார கொள்கை காரணமாக, அந்நாடு  மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை உள்ளது. இதனால், அங்கு எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஏராளமானோர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். தினசரி 12மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மேலும், எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் பல மணி நேரம் காத்திரும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பல குடும்பங்கள் 3 வேளை உணவை 2 வேளை யாக குறைந்துள்ளது. உணவு விடுதிகள் மூடப்பட்டுவருகின்றன. மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். நாளுக்கு நாள் சூழல் மோசமடைந்து வருகிறது.

இதையடுத்து இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவி வருகிறது. கடந்த மாதம் ரூ.3,750 கோடிக்கு கடன் உதவி வழங்கியது. இத்தொகை எரிபொருள் இறக்குமதிக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும்,  ரூ.7,500 கோடி அளவில் கடனுதவியும் வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கும், இலங்கை அரசுக்கும் இடையேயான ஒப்பந்தம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

அதைத்தொடர்ந்து, சுமார் 40 ஆயிரம் டன் டீசலை இலங்கைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு சம்மதித்தது. இதனை 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் திட்டத்தின்கீழ் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி,  இந்தியா கப்பலில் அனுப்பிய 40 ஆயிரம் டன் டீசல் இலங்கை தலைநகர் கொழும்புவை சென்றடைந்தது.  இந்தியா அனுப்பிய டீசல் இன்று மாலை இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் மண்ணெண்ணெய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் உதவிக்கரம் அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.