டெல்லி: 4நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவை வழங்கினார்.
டெல்லியில் முகாமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பலரை சந்தித்து பேசினார்.
இதையடுத்து இன்று டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முதல்வர் ஸ்டாலின் உடன், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஆர் பாலு எம்பி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க கோரி வலியுறுத்தியதுடன், பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவையும் வழங்கினார்.
மனுவில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.20,860.40 கோடி நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.20,860.40 கோடியில், ஜிஎஸ்டி நிலுவை தொகை மட்டும் ரூ.13,504.70 கோடி இருக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்கும் காலம் ஜுனுடன் முடிந்தாலும் மேலும் 2 ஆண்டுக்கு வழங்க வேண்டும் என்றும் ஜிஎஸ்டி உள்பட 16 திட்டங்களுக்கான தமிழகத்துக்குரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் நிதியமைச்சருடன் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.