டெல்லி: “காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்க வாழ்த்துகிறேன், ஜனநாயக பாதுகாப்புக்கு காங்கிரஸ் கட்சி தன்மை வலிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்,  தோல்வி உண்டானால், ஒருநாள் வெற்றியும் உண்டாகும்” என இந்திய போக்கு வரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மத்திய பாஜக அரசின், மனிதாபிமானம் மிக்க அமைச்சர்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி முதன்மையானவர். எதையும் துணிச்சலோடு பேசக்கூடியவர். கட்சி மாச்சரியமின்றி அனைவருடனும் அன்போடு பழகுபவர். இவர் ஏற்கனவே மகாராஷ்டி மாநில அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர், 2009 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்காரி பிஜேபியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் கட்சி தலைமையில் மாற்றம் செய்யப்பட்டதும், அவர் கட்சி தலைவர் பதவியை துறந்தார்.  தற்போது .நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக உள்ளார்.

இவர் அவ்வப்போது மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளையும் விமர்சித்து வருவார். இதனால், இவர்மீது காங்கிரஸ் கட்சி உள்பட பல அரசியல் கட்சிகளிடம் நல்ல மரியாதை உண்டு. ஏற்கனவே, பணவீக்கம் குறித்து நிதின்கட்கரி கருத்துத் தெரிவித்திருந்தார். அப்போது, பிரதமர் மோடிதான் நிதிஅமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர். எக்ஸ் நிதியமைச்சராக இருந்தாலும் சரி, ஒய் நிதிஅமைச்சராக இருந்தாலும் சரி அனைத்து முடிவுகளும் பிரதமர் மோடிதான் எடுக்கிறார் என்று இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் தற்போது, சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததுள்ளது குறித்து புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

ஜனநாயகத்திற்கு வலுவான காங்கிரஸ் முக்கியம் என்றும், தேசிய அளவில் கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதே தனது நேர்மை யான விருப்பம் என்றும் கட்காரி கூறினார்.

ஜனநாயகம் இரு சக்கரங்களில் இயங்குகிறது. ஒரு சக்கரம் ஆளுங்கட்சி, மற்றொரு சக்கரம் எதிர்க்கட்சி. ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி தேவை, அதனால்தான் தேசிய அளவில் காங்கிரஸ் வலுப்பெற வேண்டும் என்று இதயத்திலிருந்து உணர்கிறேன்.

காங்கிரஸ் பலவீனமடைந்து வரும் நிலையில், மற்ற பிராந்தியக் கட்சிகள் அதன் இடத்தைப் பிடிக்கின்றன.

காங்கிரஸின் இடத்தை மற்ற பிராந்திய கட்சிகள் கைப்பற்றுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

பிராந்திய கட்சிகள் எதிர்க்கட்சியாவதை தடுக்க வலிமையான காங்கிரஸ் கட்சி அவசியம். அதனால் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்க வாழ்த்துகிறேன் என்றார்.

 தேர்தல் தோல்வியால் அதன் உறுப்பினர்கள் சோர்வடையக்கூடாது என்று வலியுறுத்தியவர், தோல்வி உண்டானால் ஒரு நாள் வெற்றியும் உண்டாகும் என காங்கிரஸ் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினார்.

பாஜக அமைச்சரான நிதின்கட்கரியின் பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நிதின் கட்கரியின் ஒளிவு மறைவற்ற பேச்சை வரவேற்றுள்ளனர்.