சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 நாட்கள் அரசு முறை சுற்றுபயணம் மேற்கொண்டு, ஏராளமான தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை தனி விமானத்தில் சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
சர்வதேச முதலீடுகள் ஈர்க்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார். கடந்த 24-ந்தேதி இரவு துபாய் சென்றார். இந்த 4 நாட்கள் பயணத்தின்போது, துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டிற்கான அரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அங்குள்ள முக்கிய அமைச்சர்கள் முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக உள்ள சூழல் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விவரித்தார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் அபுதாபிக்குச் சென்றார். அங்கும் தமிழ் நாட்டிற்குப் பல சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அபுதாபியிலும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. துபாய், அபுதாபி பயணம் மூலம் மொத்தம் தமிழ்நாட்டுக்கு 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.
அதைத் தொடர்ந்து அபுதாபி தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து தனி விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னைக்கு திரும்பினார்.
தமிழகம் திரும்பிய முதல்அமைச்சருக்கு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தொழிற்துறை செயலர் கிருஷ்ணன், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.