ஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்நாட்டு அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து வருகிறார்.
இந்தியாவிலேயே தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதையும் அதற்கான உள்கட்டமைப்புகள் உள்ளதையும் சுட்டிக்காட்டி வரும் முதல்வர் அங்கு நடைபெற்று வரும் கண்காட்சியில் தமிழகம் சார்பில் தனி அரங்கையும் நேற்று திறந்து வைத்தார்.
தமிழ் நாட்டில் முதலீடு செய்ய இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுடன் சுமார் 6100 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துபாயில் புகழ்பெற்ற லூலூ மார்க்கெட் தமிழ்நாட்டில் சுமார் 3500 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தம் செய்துள்ளது தமிழகத்தில் 2 பெரிய ஹைப்பர் மார்க்கெட்டுகளை அமைக்க இருக்கும் லூலூ இதன் மூலம் 5000 பேருக்கு வேலை வழங்க இருக்கிறது.
தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட மேலும் சில நிறுவனங்கள் :
நோபல் குரூப் நிறுவனத்துடன் 1000 பேருக்கு வேலை வழங்கக்கூடிய வகையில் 1000 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்,
ஒயிட் ஹவுஸ் நிறுவனத்துடன் 3000 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் ஒருங்கிணைந்த தையல் ஆலை அமைக்க ஒப்பந்தம்.
மேலும், ரூ. 100 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் டிரான்ஸ்க்ரூப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம்.
தவிர, தூத்துக்குடியில் அண்மையில் அமைக்கப்பட்ட அறைக்கலன் தொழில் பூங்காவிற்கான முதலீட்டு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.
துபாயில் கடந்த அக்டோபர் முதல் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் திறக்கப்பட்டுள்ள தமிழக அரங்கு மார்ச் 31 ம் தேதி இந்த கண்காட்சி முடியும் வரை செயல்பட இருக்கும் நிலையில் மேலும் சில முதலீடுகளுக்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.