சென்னை
கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்தாலும் நீதிமன்றம் அதை அகற்ற உத்தரவிடும் என சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாமக்கல் நகரில் சாலையை ஆக்கிரமித்து மாரியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளதாக கூறபடுகிறது. மேலும் அந்த கோவில் பாப்பாயி என்பவருக்கு சொந்தமான இடத்துக்குச் செல்லும் வழியை தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதையொட்டி பாப்பாயி இந்த கோவிலை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்து வந்தது. இன்று நடந்த விசாரணையில் நீதிபதி, “எந்தக் கடவுளும் பொது இடத்தை ஆக்கிரமித்து தனக்குக் கோவில் கட்டுமாறு கேட்பதில்லை. எனவே பொது இடங்களை ஆக்கிரமித்து அங்குக் கோவில் கட்டுவதன் மூலம் நீதிமன்றத்தின் கண்களை மூடிவிட முடியாது.
கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும். எனவே அடுத்த 2 மாதங்களில் மாரியம்மன் கோவில் நிர்வாகம் பொது இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அப்புறப்படுத்த வேண்டும்” என உத்தரவு இட்டுள்ளார்.