சான்ஃப்ரான்சிஸ்கோ
முகநூல் எனத் தமிழில் அழைக்கப்படும் ஃபேஸ்புக்கில் விரைவில் 3 டி விளம்பரங்கள் வெளிவர உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில் மெட்டா எனப் பெயர் மாற்றப்பட்ட நிறுவனத்தின் கீழ் கோடிக்கணக்கான பயனர்களுடன் உள்ள முகநூல் இயங்கி வருகிறது. இதனுடன் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளும் இயங்கி வருகின்றன. பயனாளிகளைக் கவர இந்நிறுவனம் பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
அவ்வகையில் மெட்டா நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளில் 3 டி விளம்பரங்களை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்வகையான விளம்பரங்கள் பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என நம்பிக்கை உள்ளது.
மேலும் மெட்டா நிறுவனம் தங்களின் இந்த புதிய முயற்சிக்கு பயனர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே முகநூலில் சாதாரண புகைப்படங்களை 3 டி புகைப்படங்களாக மாற்றிப் பதிவிடும் வசதி உள்ளதற்கு பயனர்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.