கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 590 கி.மீ தூரத்துக்கு புதிய அதிவேக ரயில் திட்டம் ஒன்றை கேரள அரசு அறிவித்துள்ளது.

சில்வர்லைன் திட்டம் என்று கே-ரயில் நிறுவனத்தால் பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

63,941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தின் மூலம் கேரளாவின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் நேரம் வெகுவாக குறையும் என்று கூறப்படுகிறது.

விளை நிலங்கள் வழியே அமைக்கப்பட இருக்கும் இந்த சில்வர்லைன் திட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கனவு திட்டமாக வர்ணிக்கப்படும் நிலையில் இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கோழிக்கோடு பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு கல்நடும் வேலை நடந்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நில உரிமையாளர்களுடன் அந்த பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் தற்போது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்நிலையில், கோழிக்கோடு பகுதியில் கேரள இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்ய வந்த போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

அந்த போலீஸ் வாகனம் சிறிது தூரத்தில் டீசல் இல்லாமல் நின்று போனது இதனை அடுத்து இளைஞர் காங்கிரசார் டீசல் விலையை ஏற்றி மக்களை வஞ்சிக்கும் மத்திய பாஜக மற்றும் பினராயி விஜயனின் மாநில அரசுக்கு எதிராக குரலெழப்பியவாரே அந்த வாகனத்தை தள்ளிச் சென்றனர்.