டில்லி

டில்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஆம் அத்மி கட்சி அரசியலை விட்டு விலகும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லி சட்டமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.   மேலும் டில்லியில் மட்டுமல்லாது பஞ்சாபிலும் ஆம் ஆத்மி வெற்றிக் கொடி நாட்டி உள்ளதால் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா முழுவதும் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த மாநகராட்சியாக இருந்த டில்லி மாநகராட்சி, தெற்கு டில்லி, வடக்கு டில்லி, கிழக்கு டில்லி என மூன்று மாநகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டது. நிர்வாக காரணங்கள் காரணமாக இந்த மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்வதில் தொய்வு ஏற்பட்டதோடு பணியாளர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க முடியாமல் போனது.

நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டதால் 3 மாநகராட்சி களையும் ஒரே மாநகராட்சியாக ஒருங்கிணைக்க மத்திய பாஜக அரசு முடிவெடுத்தது. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு டில்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநகராட்சி ஒருங்கிணைக்கும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் தெரிவித்தது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்,

“ஆம் ஆதமி  கட்சியைக் கண்டு பாஜக பயந்து விட்டது.  டில்லி மாநகராட்சி தேர்தலை குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் ஆம் ஆத்மி கட்சி அரசியலை விட்டு வெளியேறும். உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி எனக் கூறிக்கொள்ளும் பாஜக ஒரு சிறிய கட்சி மற்றும் ஒரு சிறிய தேர்தலைக் கண்டு பயந்து விட்டது”

எனக் கூறி உள்ளார்.