புதுச்சேரி

பாஜகவை எதிர்த்து வரும் 29 ஆம் தேதி நடக்கும் வேலை நிறுத்தத்தில் பாஜக அளும் புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.

மத்திய  பாஜக அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 28, 29ம் தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.  இதையொட்டி புதுவையில் ஐஎன்டியூசி, ஏஐடியூசி, சிஐடியூ, தொமுச, எம்எல்எப், எல்எல்எப், ஏஐசிசிடியூ, ஏஐயூடியூசி, என்டிஎல்எப் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து 28ம் தேதி வேலைநிறுத்தம், 29ம் தேதி முழு அடைப்பு போராட்டமும் அறிவித்துள்ளனர்.

ஐஎன்டியூசி மாநில தலைவர் பாலாஜி ரவிச்சந்திரன், ஏஐடியூசி பொதுச்செயலாளர் சேது செல்வம் ஆகியோர் இது குறித்து,

”மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளது.   மேலும் தேசிய சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக தாரை வார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை வங்கிகளின் வராக்கடன் ரூ.13 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கையால் அத்தியாவசிய பொருள் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, வேலையிழப்பு, ஊதிய வெட்டு ஆகியவை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.   எனவே நாம் இத்தகைய சூழலில் தேசத்தை காப்போம், மக்களை காப்போம் என்ற முழக்கத்தோடு நாட்டின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து 28, 29ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

புதுச்சேரியில் வேலை நிறுத்தத்தோடு 29ம் தேதி முழு அடைப்பு  போராட்டமும் நடக்கிறது. அன்று 11 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். அனைத்டு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கங்கள், வர்ததக நிறுவனங்களிடம் இந்த போராட்டத்துக்கு ஆதரவு கேட்டுள்ளோம். எங்களிடம் அதிகளவு வாகன போக்குவரத்து சங்கம் உள்ளது. ஆகவே முழு அடைப்பு  அன்று வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருக்கும். மேலும் அன்றைய தினம் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கக் கோரியுள்ளோம்.”

எனத் தெரிவித்துள்ளனர்.