சென்னை: தமிழக பாடப்புத்தகங்கள் முழுக்க முழுக்க தமிழகத்திலேயே அச்சடிக்கப்படுவதாக தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், பாடப்புத்தங்களை வெளிமாநிலங்களில் அச்சடிக்க டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே பாடப்புத்தங்கள் அச்சடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த நிறுவனங்களுக்கும் டெண்டர் விடப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 97 நிறுவனங்களுக்கு பாடநூல் அச்சிடும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும், முழுக்க முழுக்க தமிழக நிறுவனங்களுக்கு மட்டுமே பாடப்புத்தகங்கள் அச்சிடும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பாடநூல் கழகம், தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 19ந்தேதி அன்று வெளியான செய்தியில், தமிழகம் முழுவதுமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்கான புத்தகங்கள் ஆந்திராவில் டெண்டர் விடுவதாக செய்திகள் பரவின. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பள்ளி பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணிகள் வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கப்படுவதால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது டன், தமிழ்நாட்டில் இயங்கி வரும் அச்சக நிறுவனங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாகவும், துறைசார்ந்த சில உயர் அதிகாரிகள் தங்களின் சுயலாபத்துக்காக தவறான தகவல்களை அரசுக்கு தெரிவித்து,புத்தகம் அச்சிடும் பணிகளை அண்டை மாநிலங்களுக்கு மடைமாற்றி வருகின்றனர் என தமிழ்நாடு புத்தகம் அச்சிடுவோர் சங்கம் தெரிவித்தனர்.
பின்னர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் விளக்கம் அளித்தது. அதில், “பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள 8 கோடி புத்தகங் களுக்கான ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு இல்லை. அரசின் உத்தரவுப்படி உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. உலகளாவிய டெண்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அச்சகங்களுடன், பிற மாநிலத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அதன்படியே ஆந்திரா, கர்நாடகா அச்சகங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
உலகளாவிய டெண்டர் கோரி ஒப்பந்தங்களை இறுதி செய்ய வேண்டும் என்ற அரசாணையில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த அச்சகங்களுக்கு மட்டும் ஒப்பந்தங்கள் வழங்க இயலும். எனவே, அரசாணையில் திருத்தம் வேண்டி அரசுக்கு பாடநூல் கழக தலைவர் லியோனி கடிதம் எழுதி உள்ளார். கடிதத்துக்கு பதில் கிடைத்த உடன், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது, தமிழகத்தை சேர்ந்த 97 நிறுவனங்களுக்கு பாடநூல் அச்சிடும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது தமிழ்நாடு பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வழக்கமாக ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த நிறுவனங்களுக்கும் டெண்டர் விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை முழுக்க முழுக்க தமிழக நிறுவனங்களுக்கு மட்டுமே பாடப்புத்தகங்கள் அச்சிடும் டெண்டர் வழங்கப்பட்டுள்ள. இதையடுத்து பாட புத்தகங்கள் அச்சிடும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரை 90 சதவீத அச்சிடும் பணி நிறைவு பெற்றுள்ளதாகவும், பள்ளிகள் திறப்பதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.