சென்னை: இன்று ராகுகேது பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள பிரபல கோவில்களில் ராகுகேது பெயர்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 3.13 மணிக்கு ராகு, கேது நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் இடப்பெயர்ச்சி ஆகினர். இதையொட்டி திருநாகேஸ்வரத்தில் விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
இன்று, ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர்.
நவக்கிரகங்களில் ராகு-கேது, குரு, சனி ஆகிய கிரகங்கள் மட்டுமே அடிக்கடி இடம் பெயரும் தன்மை கொண்டவை ஆகும். ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். மேலும் நிழல் கிரகங்கள் என அழைக்கப்படும ராகு-கேது நீங்கலாக மற்ற கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி செல்லும் தன்மை உடையவை ஆகும்.
ராகு கேது பெயச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் ராகு, கேது ஸ்தலங்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர். ராகு கேது பரிகார ஸ்தலமாக விளங்கும் நவக்கிரக தலங்களில் ஒன்றான கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இந்த தலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு ராகு கேது பெயர்ச்சி இரு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி முதல்கட்ட 3நாள் லட்சார்ச்சனை விழா கடந்த 19-ந்தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் நடைபெற்று வந்தது. நேற்று இருகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை 10.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3.13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, ராகு கேது பெயர்ச்சி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இன்று பிற்பகல் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, 2வது கட்ட லட்சார்சனை பூஜை வருகிற 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. 26-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனைகள், தயிர் பள்ளயம் தீபாராதனை நடக்கிறது.
முன்னதாக ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ராகுகேது பெயர்ச்சியை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் திருநாகேஸ்வரத்தில் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.