சென்னை: 10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, பயனர்களுக்கு நகைகள் திருப்பி வழங்கப்படும் என  அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்குக்கு முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்கள் பதில் கூறினர்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி,  கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் பல்வேறு இடங்களில் தள்ளுபடி செய்யப்படவில்லை, எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி   இன்னும் 10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, நகைகள் திரும்ப வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
இதையடுதது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக வாக்குறுதியை நம்பியே மக்கள் நகைக்கடன் பெற்றனர்  என்று கூறினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின்,  முறைகேடு செய்தவர்களுக்கும் கடன் தள்ளுபடி செய்யச் சொல்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் கூறியஎடப்பாடி பழனிச்சாமி, முறைகேடுகள் நடந்ததை ஆதரிக்கவில்லை; ஆனால், திமுக வாக்குறுதியை நம்பியே ஏராளமான  மக்கள் நகைக்கடன் பெற்றனர் என்றார்.
பின்னர் பேசிய அமைச்சர் பெரியசாமி, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே பல இடங்களில் நகைக்கடன் பெற்று முறைகேடு செய்துள்ளனர் என்றும், அவை அனைத்தும் எப்படி தள்ளுபடி செய்யப்படும் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.