சென்னை

பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஏற்புடையது இல்லை எனச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் சமத்துவ மக்கல் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செய்லர்க்ள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது.  இந்த கூட்டத்தில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்துக்குக் காமராஜர் பெயரைச் சூட்ட வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அக்கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்கள் கேள்விக்கு அளித்த பதிலில், “தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், தமிழகம் பெரிதும் வளர்ச்சியடையும்.  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் திமுக ஆட்சி நிர்வாகம் குறித்துச் சரியான விமர்சனத்தைக் கூறமுடியும்.

பாஜகவின் ஒரே நாடு, ஒரே தேர்தல்  திட்டத்தை ஏற்க முடியாது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் அது சாத்தியமில்லை.   யாருக்கும் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க உரிமை இல்லை. எனக்கு நடிகர் சங்கத் தேர்தலில்  ஆர்வம் இல்லை என்பதால், அதுகுறித்து பேச விரும்பவில்லை. நான் எனது 150-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.