க்னோ

தேர்தல் முடிந்த பத்தே நாட்களுக்குள் சமாஜ்வாதி கூட்டணியை உடைக்க பாஜக திட்டம் தீட்டி உள்ளது.

கடந்த 2017 ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வின் கூட்டணியில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி அங்கம் வகித்தது. இந்த கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், பாஜக  அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தார்  ஆனால்  கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக, இந்த  கூட்டணியில் இருந்து சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி  வெளியேறியது.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை  தேர்தலில்  சமாஜ்வாதி கட்சியுடன் இக்கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் 111 இடங்களை வென்ற சமாஜ்வாதி கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.  இந்த தேர்தலில் சுகல்தேவ் பாரதிய சமாஜ்  6 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்ததால், ஓம் பிரகாஷ் ராஜ்பர் மீண்டும் பாஜக பக்கம் தாவக்கூடும் என்று முன்பே தகவல் வெளியானது

தேர்தல் முடிவு வெளியான 10 நாட்களில் சமாஜ்வாதி கூட்டணியை உடைப்பதற்கான ஆட்டத்தில் பாஜக இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக, நேற்று முன்தினம் நடந்தஹோலி பண்டிகையின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓம் பிரகாஷ் ராஜ்பர் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.  இந்த சந்திப்பு தொடர்பான ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் சமாஜ்வாதி கூட்டணியில் இருந்து விலகப் போவது இல்லை என்று ராஜ்பர் தெரிவித்துள்ளார். சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் அருண் ராஜ்பர் இது குறித்து, ‘‘பாஜகவுடன் மீண்டும் சேருவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது பழைய புகைப்படம்,’’ எனத் தெரிவித்துள்ளார்.   ஆயினும் இதை பலர் நம்பாமல் உள்ளனர்.