டெல்லி: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கைவிட வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. சீனா உள்பட சில வெளிநாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதைத் தொடர்ந்து, மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்து உள்ளது.
இந்தியாவில், கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,06,080-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 516352-ஆக உள்ளது. தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. தொற்று பரவல் குறைந்து வருவதால் மக்களிடையே முகக்கவசம் அணிவது மட்டுமின்றி, கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஆனால், சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் சில மாகாணங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவிலும் ஸ்டெல்த் வகை கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றின் உருமாற்றத்தின் காரணமாக அடுத்தடுத்து திரிபுகள் வந்துகொண்டே இருக்கின்றன. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான்ன், டெல்மிக்ரான் என திரிபுகள் வந்துள்ள நிலையில், இஸ்ரேல் நாட்டில் புதிய வகை திரிபு ஒன்று உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவிலும் கொரோனா 4வது அலை பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, பரிசோதனைகளை அதிகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்து செல்லவும் அறிவுறுத்தியுள்ளது.