2
மிழக சட்டசபைக்கு தேதி அறிவிக்கப்போகிறது தேர்தல் ஆணையம். இந்த நிலையிலும் தமிழக காங்கிரஸுக்குள் கோஷ்டி மோதம் தீர்ந்தபாடில்லை” என்று வருத்தப்படுகிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.
இது பற்றி காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
காங்கிரஸ் சார்பாக, போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நடந்த நேர்காணலை, சிதம்பரம் மற்றும் தங்கபாலு அணியினர் புறக்கணித்துவிட்டனர். அதுமட்டுமின்றி,  தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, இளங்கோவனை நீக்க இப்போது தீவிர முயற்சி எடுத்துவருகின்றன, அந்த கோஷ்டிகள்.
“இளங்கோவனை மாற்றுவது மட்டுமல்ல…  கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு  ஒன்றை அமைக்க வேண்டும்” என்று இந்த கோஷ்டிகள் விரும்புகின்றன.
இது குறித்து தங்களுக்குள் ஆலோசிக்க இன்னும் சில நாட்களில் தனி கூட்டம் நடத்தவும் ஏற்பாடு நடந்து வருகிறது. சிதம்பரம் தலைமையில் நடக்கவிருக்கும் இந்த கூட்டம் சென்னை அல்லது கோவையில் நடக்கப்போகிறது.
இந்த கூட்டத்தில் சிதம்பரம், தங்கபாலு வசந்தகுமார்,  கிருஷ்ணசாமி,  செல்லக்குமார் உட்பட பல கோஷ்டி தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
இவர்கள், “ தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  இளங்கோவன் தன்னிச்சையாக செயல்படுகிறார். பிற முக்கிய தலைவர்களை எந்த ஒரு விசயத்துக்கும் கலந்து ஆலோசிப்பதில்லை.  விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியை, நாங்கள் புறக்கணித்தை இளங்கோவன் கோஷ்டியினர் குறை கூறுகிறார்கள்.   இளங்கோவன், தனது ஆதரவாளர்களுக்கு மட்டும், ‘சீட்’ வாங்கி கொடுத்து விட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார். மற்றபடி கண்துடைப்பாகவே அந்த நேர்காணல் நடந்தது. ஆகவேதான் நாங்கள் புறக்கணித்தோம்” என்கிறார்கள்.
மேலும் அவர்கள், “இளங்கோவனை தலைவர் பதவியில் இருந்து  மாற்றினால்தான் சரியான வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும். இல்லாவிட்டால் காங்கிரஸுக்கு தோல்விதான்.  ஆகவே அவரை மாற்றாவிட்டால் வரும் தேர்தலை புறக்கணிப்போம்” என்கிறார்கள்.
இளங்கோவன் தரப்பினரோ, “ அனைத்து கோஷ்டிகளையும் இளங்கோவன் அரவணைத்துச் செல்கிறார். ஆனால்  அவர்கள்தான் இளங்கோவனுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. கட்சி கூட்டங்களுக்கு அழைத்தாலும்  அவர்கள் வருவதில்லை” என்கிறார்கள்.
மேலும், “வரும் தேர்தலை எதிர் கோஷ்டியினர் புறக்கணிப்பதாக இருந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை. தோல்வி அடைவோம் என்ற பயத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தவர்கள்தானே இவர்கள்? இளங்கோவன் மட்டும்தான் அந்தத் தேர்தலில் தைரியமாக போட்டியிட்டார். ஆகவே அவர்கள் ஒதுங்குவதே நல்லது” என்கிறார்கள்.

  • இதுதான் காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படும் தகவல்.

இதற்கிடையே தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி மோதலால் கூட்டணி கட்சியான தி.மு.க. கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோஷ்டி மோதல் குறித்து தனது கவலையை காங்கிரஸ் மேலிடத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கொண்டு சென்றுள்ளதாகவும் பேசப்படுகிறது.
இதையடுத்து இன்னும் ஓரிரு நாளில் காங்கிரஸ் மேலிட தரப்பிலிருந்து தமிழக காங்கிரஸ் தலைவருக்கு ஓலை (அழைப்பு)  வரும் என்றும், தலைவர்களுக்கு  ஆலோசனைகள் வழங்கப்படும்  என்றும் பேசப்படுகிறது.