சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிற பட்ஜெட் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டி உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களைப் பாராட்டுகிறேன் என கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்து ஆண்டுக்கால அதிமுக ஆட்சியின் தவறான நிதி மேலாண்மை யின் காரணமாக, தமிழக அரசின் கடன் சுமை 2021 இல் ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாகவும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ஏறத்தாழ ரூபாய் 3.50 லட்சம் கோடியாகவும் ஆக மொத்தம் கிட்டத்தட்ட ரூபாய் 10 லட்சம் கோடி கடன் சுமையை தி.மு.க. தலைமையிலான ஆட்சிக்கு விட்டுச் செல்லப்பட்டது. இதற்கான முழு விவரங்கள் நிதியமைச்சர் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் விரிவாக வெளியிடப்பட்டது.
இந்தப் பின்னணியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழக அரசு பதவியேற்ற நாளிலிருந்து பணிகளைத் தொடங்கி, சாதனை களைப் படைத்து வருகிறது. இதனால் தமிழகம் தலைநிமிர்ந்து பீடு நடை போட்டு வருகிறது. இதை உறுதி செய்கிற வகையில் தமிழகத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் மூலம் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையால் ரூபாய் 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்த பின்னர் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டுமென நிதியமைச்சர் மத்திய அரசைக் கோரியிருக்கிறார். 15-வது நிதிக்குழு பரிந்துரையின்படி தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு ஒழுங்காக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை நிதியமைச்சர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூபாய் 4,816 கோடி நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த 2015 ஆம் ஆண்டு அன்றைய அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அத்தகைய பாதிப்புகள் திரும்ப ஏற்படாமல் இருக்க, சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூபாய் 1,000 கோடியும், பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூபாய் 7,400 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிதியின் மூலம் இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படுகிற பாதிப்புகளிலிருந்து மக்களை நிச்சயம் காப்பாற்ற முடியும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில் நூலகத்துறை புதிய பொலிவும், புத்துணர்ச்சியும் பெற்றது. சர்வதேச தரத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூலகம் அமைக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அண்ணா நூலகத்தைச் சீரழித்ததோடு, நூலகத்துறையை ஊழல் மயமாக்கினார்கள். அதிலிருந்து நூலகத்துறையை விடுவிக்கிற வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரூபாய் 125 கோடியில் புதிய நூலகங்கள் அமைக்கவும், 6 புதிய மாவட்டங்களில் ரூபாய் 36 கோடியில் நூலகங்கள் தொடங்கவும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் மக்களிடையே மங்கி வருகிற வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும், நூலகங்களைச் செழுமைப்படுத்தவும் எடுக்கப் பட்ட நடவடிக்கைகளாகும்.
சுய உதவிக்குழு மற்றும் வேளாண் கடன் வழங்க ரூபாய் 4,130 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நகைக் கடன் தள்ளுபடிக் காக ரூபாய் 1,000 கோடியும், வட்டியில்லா பயிர்க் கடன் திட்டத்திற்கு ரூபாய் 200 கோடியும், ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூபாய் 2,800 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துகிற நடவடிக்கையாகும். அதேபோல, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான முழுச் செலவை ஏற்க ரூபாய் 204 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த பிறகு, உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 உதவித் தொகை வழங்கப்படுவது மிகுந்த பாராட்டுக்குரியது. பொதுவாக மாணவிகளிடையே பள்ளிகளில் இடை நிற்றல் அதிகமாக இருப்பதை இந்த உதவித் தொகை நிச்சயம் தடுத்து நிறுத்தும். ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அனைத்து பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேம்படுத்த ரூபாய் 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளுடைய தரம் நிச்சயமாக உயர்த்தப்படும். ரூபாய் 120 கோடியில் முன்மாதிரி பள்ளிகள் 15 மாவட்டங்களில் தொடங்குவதன் மூலம் மாணவர்களுடைய கல்வித் தரம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாகச் சென்னை மாநகரில் குழந்தைகளின் விளையாட்டுக்காக வாய்ப்புகள் மிகமிக குறைவாக இருக்கிறது. இதைப் போக்கும் வகையில் கிண்டி குழந்தைகள் பூங்காவை மேம்படுத்த ரூபாய் 20 கோடி செலவு செய்வது மிகுந்த வரவேற்புக்குரியது. அதேபோல, வடசென்னையில் இளைஞர்களை ஈர்ப்பதற்காக ரூபாய் 10 கோடி செலவில் நவீன விளையாட்டு வளாகம் அமைக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல் – துறைமுக உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூபாய் 5,700 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால் துறைமுகத்திற்கு வருகிற வாகனங்களின் நெரிசல் பெருமளவில் குறைக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல, கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகன நெரிசலைக் குறைக்கவும், அதிகரித்து வரும் விபத்துகளைத் தடுக்கவும், ஆறு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு ரூபாய் 135 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு முன்னோடியாக தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் அமைந்திட உறுதி செய்யும் வகையில் ரூபாய் 18,218 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வேலை வாய்ப்புகள் பெருமளவில் பெருகவும், தொழில் வளர்ச்சி ஏற்படவும் மிகப்பெரிய வாய்ப்பு அமைந்திருக்கிறது.
அனைத்து மாணவர்களும் பள்ளிக் கல்வியை முடித்து பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்புகள் இருந்தா லும், ஐ.டி.ஐ. கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போதைய நிதிநிலை அறிக்கையில் இந்த கல்வி நிறுவனங்களை மேம்படுத்தவும், இதில் பயிலும் மாணவர்களின் முழுச் செலவை அரசே ஏற்கவும் ரூபாய் 2,517 கோடி ஒதுக்கியிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.
இதன்மூலம் மாணவர்களிடையே தொழில் பயிற்சித் திறனை மேம்படுத்தி சுயதொழில் தொடங்க அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான திருக்கோயில்களைப் புனரமைத்து, சீரமைக்க ரூபாய் 100 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூபாய் 340 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்து சமய அறநிலையத்துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு திருக்கோயில்கள் நிர்வாகம் புத்துணர்வு பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் கவனிப்பாரற்றுக் கிடந்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திற்கு ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது மிகச் சரியான நடவடிக்கையாகும். கடந்த கால அரசுகள் செய்யத் தவறியதை தற்போது தமிழக அரசு செய்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.
தமிழக முதலமைச்சராக தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் விரைந்து சென்று கொண்டிருக்கிறது. அத்தகைய வளர்ச்சியை அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்துகிற வகையில் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்களைப் பாராட்டுகிறேன். நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பார்வையோடு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து செல்கிற சீரிய முயற்சியாகக் கருதிப் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.