மதுரை

மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது.

மதுரை நகரின் முக்கிய அடையாளங்களில் காந்தி அருங்காட்சியகமும் ஒன்றாகும்.   மதுரை நகருக்கும் மகாத்மா காந்திக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது.   காந்தியின் புகழ்பெற்ற எளிமையான ஆடைக்கு அவர் மாறியது மதுரையில் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.    இங்குள்ள காந்தி அருங்காட்சியகத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிக்ள் வருகை புரிகின்றனர்.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மதுரை காந்தி அருங்காட்சியகத்தை ரூ.6 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  அதற்குரிய நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே முதல் கட்டமாக ஆய்வுப் பணிகளை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் துவக்கினர்.

இதைத் தொடர்ந்து காந்தி அருங்காட்சியகத்தின் பிரதான கட்டிடத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுப் பணிகள் இன்றும், நாளையும் நடைபெறும் என்று பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி இன்று காலை கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களைப் பார்வையிட்டனர்.

அந்த விரிசல்களைத் தொன்மை மாறாமல் சரி செய்வது, கழிப்பறை வசதிகள், லிப்ட் வசதி உள்ளிட்டவற்றை புதிதாக ஏற்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தனர். இது குறித்து பொறியாளர்கள் “தற்போதைய ஆய்வுக்கு பிறகு என்னென்ன பணிகள் செய்யலாம் என்பது குறித்து விரிவான பட்டியல் தயாரிக்கப்படும். பிறகு முறையாக டெண்டர் விடப்பட்டு, உடனடியாக புதுப்பிக்கும் பணிகள் துவக்கப்படும்’’  எனத் தெரிவித்துள்ளனர்.