சென்னை
சென்னை நகரில் 44 ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
உலக அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் “செஸ் ஒலிம்பியாட்” முக்கியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள். வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை இந்த ஆண்டிற்கான போட்டிகள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளை பல்வேறு விளையாட்டு அமைப்புகளும் ரத்து செய்து வரும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளும் மாஸ்கோவில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. எனவே 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியாவில் நடத்த அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) முயற்சி எடுத்து வந்தது.
இப்போட்டியை நடத்த சுமார் ரூ 75 கோடி வரை செலவாகும் என்றும் இதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தலைவர் பரத் சிங் சவுகான் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்த போட்டிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், டீம் மேலாளர்கள் என மொத்தம் 2,500 பங்கேற்கும் நிகழ்வு என்பதால் விமானச் சேவை, போக்குவரத்து, தங்குமிட வசதிகள் இருக்கும் நகரம் தேவைப்பட்டது.
எனவே டில்லி அல்லது சென்னையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படலாம் என்றும் கூறப்பட்டது. தற்போது இந்தப் போட்டிகள் சென்னையில் நடைபெறும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 முதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்,
“இந்தியாவின் செஸ் தலைநகரமான சென்னை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது! இது தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் தருணம்! உலகெங்கிலும் உள்ள அனைத்து வீரர், வீராங்கனைகளைச் சென்னை அன்புடன் வரவேற்கிறது!”
என்று பதிவு இட்டுள்ளார்.