வாஷிங்டன்: அமெரிக்f முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அவரே டிவிட் மூலம் தெரிவித்து உள்ளார்.

உலக நாடுகளை கடந்த இரு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்த கொரோனா பெருந்தொற்று படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. முழுமையாக தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டில்,  கடந்த சில நாள்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், தொற்று பரிசோதனை செய்துகொண்டதில் தனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தானும், துணைவியார் மிக்செல்லும் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்டிருப்பதை நினைவுக் கூர்ந்துள்ள ஒபாமா, தனக்கு மட்டும் கொரோனா பாசிடிவ் என்றும், தனது மனைவி மிச்செலுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்றும், தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொற்று பாதிப்புகள் குறைந்து வந்தாலும், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ளுமாறு ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா விரைவில் குணமடையவும், பூரண நலம்பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.