சென்னை:
திருமாவளவன் கருத்து வரவேற்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வழக்கம்போல் ஒன்றுசேராமல் தனித்தனியே போட்டியிட்டதன் விளைவாகவும், மத வெறுப்பு அரசியலை தொடர்ந்து பரப்பி வருவதாலும் பாஜக உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது. உத்தரப்பிரதேம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் வளர்ச்சித் திட்டங்கள், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து அவர்கள் பேசவில்லை. மாறாக ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கம் எழுப்புவது, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிரான வெறுப்பை விதைப்பது என்று மக்களின் மத உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். இது மிகவும் ஆபத்தான அரசியல்.
இந்தியாவை சூழ்ந்திருக்கும் இந்த ஆபத்தை எதிர்கொள்ளவும், விரட்டி அடிக்கவும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திரள முன்வர வேண்டும். எந்த கட்சி தலைமையேற்பது, யார் பிரதமர் என்பதைவிட அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற அவசியம் இருப்பதை எதிர்கட்சிகள் உணர வேண்டும். 4 மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றன என்று தெரிவித்து இருந்தார்.
திருமாவளவன் கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன் கருத்து வரவேற்கத்தக்கது என்றும், காங்கிரஸ், இடது சாரிகள் இணைந்து செயலாற்றினால் நிச்சயம் அது வெற்றி பெரும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சி பல முறை பின்னடைவை சந்தித்துள்ளதால், இந்த தோல்வியை சிரமாக கருதவில்லை என்றும் கூறியுள்ளார்.