கொல்கத்தா
மேற்கு வங்க சட்டசபை அமளியை முதல்வர் மம்தா பானர்ஜி கைதட்டி ரசித்ததாக ஆளுநர் ஜெகதீப் தன்கர் குற்றம் சாட்டி உள்ளார்.
திங்கள் அன்று மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை தொடர் தொடங்கியது. அன்றைய கூட்டத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். உரையின் போது மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் நடந்த வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து பாஜகவினர் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் ஆளுநர் தனது உரையை வாசிக்க மறுத்தார்.
முதல்வர் மம்தா பானர்ஜி கைகூப்பி கோரிக்கை விடுத்ததால் அவர் உரையின் முதல் மற்றும் கடைசி வரிகளை வாசித்து உரையை முடித்தார். ஆனால் உரையைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என திருணாமுல் காங்கிரஸ் பெண் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதை முதல்வர் மம்தா பானர்ஜி பாராட்டி உள்ளார். இதையொட்டி ஆளுநர் நேற்று டிவிட்டரில் ஒரு பதிவு இட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர்,
“மேற்கு வங்க சட்டப்பேரவை முதல் நாள் கூட்டத்தின்போது அமைச்சர்களும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் கிட்டத்தட்ட என்னை முற்றுகையிட்டு நின்றனர். இது போன்ற பாரம்பரியமிக்க சட்டப்பேரவை அரங்கில் நடைபெறுவதை யாரும் நியாயப்படுத்தக் கூடாது. மாநிலம் எங்கே செல்கிறது? முதல்வர் எதற்காக கை தட்டி ரசித்தார்? இந்த அமளியைப் பார்த்து கை தட்டி மகிழ்ந்தாரா? நாம் ஜனநாயகம் மலருவதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்,’
எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே, மம்தாவுக்கும் ஆளுநருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் மோதல் நிலவி வரும் நிலையில், தன்கார் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.