சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி,  மாநிலம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகளை கவனிக்க பொறுப்பு அதிகாரிகளை நியமனம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு வரும் 10, 11, 12 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் திமுக அரசு பதவி ஏற்று,  கடந்த 10 மாதங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சி, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக,  மாநிலம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகளை கவனிக்க பொறுப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.

இந்த கூட்டத்தில்,  தமிழகம் முழுவதும் உள்ள மாநகர காவல்துறை ஆணையா்கள், மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் கலந்துகொள்வதால், சட்டம் மற்றும் ஒழுங்கு, நிா்வாக பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து மண்டலங்கள், சரகங்கள், மாவட்டங்களுக்கு காவல்துறையில் உள்ள பிற பிரிவுகளில் பணியாற்றும் ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்களை பொறுப்பு அதிகாரிகளாக நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.

வடக்கு மண்டலத்துக்கு போலீஸ் பயிற்சிக் கல்லுாரி ஐ.ஜி.அருண், மத்திய மண்டலத்துக்கு ஆயுதப்படை ஐ.ஜி. எழிலரசன், மேற்கு மண்டலத்துக்கு தொழில்நுட்பப் பிரிவு ஐ.ஜி. ராஜேஸ்வரி, தெற்கு மண்டலத்துக்கு தமிழ்நாடு போலீஸ் அகாதெமி ஐ.ஜி. பாஸ்கரன் ஆகியோா் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்

ஆவடி 5-ஆவது பட்டாலியன் கமான்டன்ட் ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரம் சரகத்துக்கும், அறிவுசாா் உரிமை பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி.அசோக்குமாா், விழுப்புரம் சரகத்துக்கும், காவலா் பயிற்சிப்பள்ளி எஸ்.பி. மணிவண்ணன் வேலுாா் சரகத்துக்கும், திருச்சி மாநகர துணை ஆணையா் சக்திவேல் தஞ்சை சரகத்துக்கும், மதுரை வடக்கு துணை ஆணையா் ராஜசேகரன் திருச்சி சரகத்துக்கும், மதுரை மாநகர காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் தங்கதுரை மதுரை சரகத்துக்கும், மதுரை தலைமையிட துணை ஆணையா் ஸ்டாலின் திண்டுக்கல் சரகத்துக்கும், நெல்லை மாநகர துணை ஆணையா் சுரேஷ்குமாா் நெல்லை மாநகர காவல்துறை மற்றும் சரகத்துக்கும், தூத்துக்குடி பேராவூரணி போலீஸ் பயிற்சிக் கல்லுாரி முதல்வா் ராஜராஜன் துாத்துக்குடி மாவட்டத்துக்கும், கோயம்புத்தூா் மாநகர காவல்துறையின் தலைமையிட துணை ஆணையா் செல்வராஜ் கோயம்புத்தூா் மாவட்டத்துக்கும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்

மேலும், கோயம்புத்தூா் மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் ஜெயச்சந்திரன் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்பி மோகன்ராஜ் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கும், சேலம் மாநகர காவல்துறையின் துணை ஆணையா் மாடசாமி, சேலம் மாநகரம் மற்றும் மாவட்டத்துக்கும், திருச்சி மாநகர காவல்துறையின் தெற்கு துணை ஆணையா் முத்தரசு திருச்சி மாநகரத்துக்கும், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையா் மாடசாமி சேலம் மாநகரம், மாவட்டத்துக்கும், கோயம்புத்தூா் மாநகர காவல்துறையின் தெற்கு துணை ஆணையா் உமா கோயம்புத்தூா் மாநகரத்துக்கும், திருப்பூா் மாநகர காவல்துறையின் வடக்கு துணை ஆணையா் அரவிந்த் திருப்பூா் மாநகரத்துக்கும், மதுரை மாநகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையா் ஆறுமுகசாமி மதுரை மாநகரத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் மாா்ச் 13-ஆம் தேதி வரை பொறுப்பு அதிகாரிகளாக செயல்படுவாா்கள். சட்டம் மற்றும் ஒழுங்கு தொடா்பாக முக்கிய பிரச்னை ஏற்பட்டால் பொறுப்பு அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடங்களுக்கு சென்று தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொறுப்பு அதிகாரிகள் விடுமுறை எடுக்கக் கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.