சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை திரையிட விடமாட்டோம் என பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் மிரட்டல் விடுத்துள்ளதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021 நவம்பர் மாதம், சூர்யா நடித்த, ஜெய்பீம் திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.

ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்படும்போது சட்ட ரீதியாக முயற்சித்து வெற்றி கொள்ள முடியும் என்பதை வலியுறுத்திய இப்படம் அனைத்து தரப்பிலும் வரவேற்பைப் பெற்றது. உயர் நீதி மன்ற ஒய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு வாதாடிய வழக்கு ஒன்றின் அடிப்படையில் புனையப்பட்ட கதை.

இதில் ஒரு காட்சியில் வில்லன் கதாபாத்திரத்தின் வீட்டில் வன்னியர் சங்க அக்னி சட்டி படம், காலண்டரில் இடம் பெற்றது. இது வன்னியர்களை இழிவு படுத்துகிறது என பா.ம.க.வும் வன்னியர் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த காலண்டரில் உள்ள படம் மாற்றப்பட்டது. அதோடு நடிகர் சூர்யாவும் விளக்கம் அளித்தார்.

ஆனாலும், பா.ம.க.வும் வன்னியர் சங்கமும், “இனி சூர்யாவின் படங்களை திரையரங்குகளில் வெளியாக விடமாட்டோம்” என மிரட்டல் விடுத்தன.

இந்நிலையில் வரும் 10ம் தேதி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை வெளியிடக்கூடாது என வன்னியர் சங்கம், திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல் கடிதம் எழுதி உள்ளது. இதை த.மு. எ.க.ச. கண்டித்திருக்கிறது.

மதுக்கூர் ராமலிங்கம் – ஆதவன் தீட்சண்யா

இது குறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.

“சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியினரும் வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் மூலம் மிரட்டிவருவதற்கு தமுஎகச கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

ஜெய்பீம் படம், வன்னியர்களை அவமதித்துவிட்டதாகவும் அதற்காக சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தவொரு படத்தையும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும் அப்போது பாமகவினர் மிரட்டல் விடுத்திருந்தனர். அந்த மிரட்டலின் தொடர்ச்சியாக, இப்போது எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக்கூடாதென அக்கட்சியினரும் வன்னிய சங்கத்தினரும் மிரட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்கள் மீது தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களால் கருத்து சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைய வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் பெயரால் விடுக்கப்பட்டுள்ள இம்மிரட்டலுக்கு எதிராக குரலெழுப்புமாறு கருத்துரிமையில் நம்பிக்கையுள்ள யாவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.