மகளிர் தினத்தில் ஏமாறாதீர்கள்..
மகளிர் தினத்தை ஒட்டி நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசனின் சிறப்பு பதிவு
பெண்ணாகி வந்ததொரு
மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா !
உடல் அங்கங்களை காட்டி மயக்கி படுகுழியில் தள்ள வரும் எமனின் தூதாக தெரிகிறார் பெண் என்கிறார் பட்டினத்தார்.
வெட்டுண்ட புண்போல்
விரிந்தவல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை
தவிர்வதுவு மெக்காலம்..
ஒரு வெண் முத்து தந்தால், இரு கை கைக்கொள்ளும் அளவுக்கு ஒரு மழலையை தரக்கூடிய அந்தரங்கத்தை, வெட்டுப்பட்ட புண் என்கிறார் பத்திரகிரியார்..
அந்த காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு கடைசியாக இப்படி நன்றி கெட்டவர்களாக பெண்களை மட்டமாய் பாடி வைத்து விட்டுப் போனார்கள்.
அவர்களின் யோக்கியதை அப்படி என்றால் பிற்காலத்தில் வந்த பிரபலங்களாவது சும்மா இருந்திருக்கலாம்.. நடிகர்கள் கவிஞர்கள் என அவர்களும் பெண்களை கொலைவெறியோடு வெளுக்காமல் இருந்ததில்லை
அதிலும் லட்சோப லட்சம் ரசிகர்கள் வாய்க்கப்பெற்ற சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அக்கப்போர் பற்றி கேட்கவே வேண்டாம்.
பொண்ணா பொறந்தா
ஒருபுருஷனுக்கு நேரே
நின்னாகதான்வேணும்
அவள் வாழ்வில் ஒரு நாளே..
இதுவாவது பரவாயில்லை
அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம்
அழகழகாய் படிக்குதப்பா
அச்சடித்த காகிதத்த
அடுக்கடுக்காய் சுமக்குதப்பா
ஏட்டினிலே படிக்குதப்பா
எடுத்துச்சொன்னா புரியலேப்பா
நாட்டுக்குதான் ராணியப்பா
வீட்டுக்கு அவ மனைவியப்பா..
என்ன படித்தாலும் நீ மக்கு சாம்பிராணி ராணியாக இருந்தாலும் வீட்டுக்குள்ள கிச்சன் தான் உன் மெயின் பிளேஸ்..
கண்ணதாசனும் எம்ஜிஆரும் சேர்ந்து இப்படி பெண்களை அடித்து துவைத்து இருக்காங்க.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே
கண்டவரோடு கண்ணால் பேசி காமுறுவாருன்னு.. பாட்டு பாடி இருக்காரு.
நான் சட்டையை கழட்டி விட்டு திறந்த மார்போடு அலைவேன் .. உன்னால் என்னுடன் போட்டி போட முடியுமான்னு டான்ஸ் போட்டியில் தங்கமகன் ரஜினி பூர்ணிமாவ பார்த்து கதற கதற படுபயங்கரமாக கலாய்ச்சு இருக்காரு
விக்ரம் கமலஹாசனும் இதே ரேஞ்சுதான்.
ஆணும் பெண்ணும் சமமா? வியர்த்துக் கொட்டினால் மொட்டை மாடியில் பனியனை கழட்டி விட்டு நிற்போம். உன்னால் முடியுமா என்றெல்லாம் பெண்ணை பார்த்து கமல்ஹாசன் ஏடாகூடமா கேட்டிருக்கிறார்.
நல்லவேளை சிறுநீர் கழிக்கும் முறை பற்றி விக்ரம் கதைத் தொடரில் சுஜாதா எழுதியதை கமல்ஹாசன் அப்படியே படத்தில் சொல்லவில்லை.
எவண்டி உன்ன பெத்தான்?
கைல கிடைச்சா செத்தான். என்று சிம்பு பெண்களின் அப்பாக்களை கொலைவெறியோடு தேடுகிறார்..
இவ்வளவு ஏன் உலகம் முழுவதும் படித்த அறிவாளிகள் உருவாக்கும் டிக்சனரிக்களில்கூட பெண்களை வீக்கர் செக்ஸ் என்று குறிப்பிட்டே, அநியாயத்திற்கு மட்டம் தட்டுகிறார்கள்..
அன்று முதல் இன்று வரை, இப்படி திரும்பியது திக்கெல்லாம் பெண்களுக்கு எதிராக மட்டமான வர்ணனைகள் குறியீடுகள்.. இவற்றுக்கெல்லாம் காரணமானவர்கள் ஆணாதிக்கவாதிகள்.
இவர்கள் சொல்வதை எல்லாம் காலம் காலமாக கைதட்டி ரசித்து வரும் பிற ஆண்கள், அதைவிட கடைந்தெடுத்த ஆணாதிக்கவாதிகள்.
வருடத்தில் 364 நாட்களுக்கு இப்படி கேவலமாக பேசி விட்டு, மார்ச் 8ஆம் தேதி மட்டும் மகளிர் தினம் என்று சொல்லிக்கொண்டு பெண்களை தலையை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.
இதையெல்லாம் பெண்கள் கேட்டால் ஒரு ஆணுக்குள் ஓர் உயிர் மட்டும்தான் இருக்கிறது.
ஆனால் தாய்மை அடைந்த ஒரு பெண்ணுக்குள் இரண்டு மூன்று உயிர்கள் கூட இருக்கின்றன. இது உலக அதிசயம் என்றெல்லாம் நெஞ்சை நக்குற மாதிரி அளந்து விடுவார்கள்.
இப்படிப்பட்ட டுபாகூர் ஆண்களை எப்போதுமே நம்பவே நம்பாதீர்கள் பெண்களே..
எங்களிடம் மட்டும் எப்படி வேண்டுமானாலும் பழகுங்கள் பெண்களே..
மகளிர் தின வாழ்த்துக்களாக நாம் சொல்வது இதுதான்.
– ஏழுமலை வெங்கடேசன்..