சென்னை: சென்னையில் ரேஷன் கடைகளில் கையாடல் மற்றும் முறைகேடு  செய்ததாக 15 ரேஷன் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  பொது விநோயாக திட்டத்தில் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசியப் பண்டங்கள் விநியோகிக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படியே குடும்ப அட்டைதார்களுக்கு விரல்ரேகை பதிவு மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சென்னை (நகரம்) வடக்கு/தெற்கு சரகத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாருக்கு அத்தியாவசியப் பண்டங்கள் பயோமெட்ரிக் முறையில் விரல்ரேகை பதிவுகள் மூலம் டிசம்பர் 2021 மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பட்டியல்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ராக்ஸி முறையில் பட்டியலிட்டு வழங்காமல் அத்தியாவசியப் பொருட்களை பணியாளரால் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைப் பணியாளர்களின் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  இனிவரும் காலங்களில் இத்தவறுகள் ஏற்படாவண்ணம் நியாய விலைக் கடைகளை கண்காணிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.