சென்னை: கடந்த கால ஆட்சியாளர்களால், தமிழக நிதிநிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தமிழ்நாடு  நிதியமைச்சர் பிடிஆர் கூறினார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், ‘தமிழக பொருளாதார மாநாடு – 2022’ சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.ஆர்.பழனிவேல் ராஜன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதியமைச்சரின் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட பொருளாதார வல்லுநர்களிடையே இருந்தது.

இந்த நிலையில்,  நிதியமைச்சர் தியாகராஜன் பேசத் தொடங்கினார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், நிதி ஆதாரங்களை பெருக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாக கூறியதுடன்,  தமிழகத்தில் 76 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார இலக்கை அடைய, அடுத்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு 14 சதவீதம் ஒருங்கிணைந்த வளர்ச்சி இருக்க வேண்டும் என்று கூறினார்.

கடந்த கால ஆட்சியில் இருந்தவர்கள், தவறான நிர்வாகம் செய்ததன் விளைவாக, தமிழகத்தின் நிதிநிலை வேகமாக சரிந்துள்ளது, அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர உழைத்துக்கொண்டிருப்பதாக கூறிய தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், தற்போதைய திமுக ஆட்சியின் முதல் நான்கு ஆண்டுகள் மிகவும் முக்கியமான காலகட்டம். இவற்றை விட்டுவிட்டால், அதற்கடுத்த ஆண்டுகளில் ஆண்டுக்கு, 20 சதவீத வளர்ச்சி தேவை.

தி.மு.க.,வின் கடந்த ஆட்சியில், இந்த வளர்ச்சி விகிதம் 10.2 சதவீதம் வரை இருந்தது. அடுத்தடுத்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள், தவறான நிர்வாகம் செய்ததன் விளைவாக, தமிழகத்தின் நிதிநிலை வேகமாக சரிந்தது கவலைக்கிடமாகி உள்ளது. இதை மீட்டெடுக்கும் வகையில் இடைக்கால  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், கொரோனா தொற்று உட்பட பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்துள்ளோம். இருந்தாலும் சர்வதேச அளவில் அதிக முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர் டாக்டர் சந்திரகுமார், தென்மண்டலதலைவர் ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.