கீவ்: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற 130 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
நேட்டோ விவகாரம் தொடர்பாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. பிப்ரவரி 24ந்தேதி தொடங்கிய போர் இன்று 9வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த போரினால் இரு தரப்பும் கடுமையான சேதத்தை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி, அயல்நாட்டை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற ஆயிரக்கணக்கான இந்திய மாணாக்கர்கள்,அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் வகையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டு அதிபர்களுடன் பிரதமர் மோடி பேசி வருகிறது. மாணவர்கள் மீட்பு பணியில் 4 அமைச்சர்களும் எல்லை நாடுகளுக்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர், மிஹைல் மிஸின்ட்செவ், இன்று (மார்ச் 4) தெரிவிக்கையில், “உக்ரைனின் பெல்கோரோட் பகுதியின் நெகோடெவ்கா மற்றும் சுட்ஜா ஆகிய சோதனைச்சாவடிகளில் இன்று காலை 6 மணியிலிருந்து 130 பேருந்துகள் இந்திய மாணவர்களை மீட்கத் தயார் நிலையில் உள்ளன. அதன்மூலம், கார்கீவ், சுமி ஆகிய நகரங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் பத்திரமாக மீட்டு மேற்கு எல்லை வழியாக வெளியேற்றும் பணி நடைபெற்றுவருகிறது.
சுமி நகரில் மட்டும் 700 இந்தியர்கள் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோரை இந்தியத் தூதரக அலுவலர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
நேற்று இரவு (மார்ச் 3) முதல் இன்று காலை வரை, 600 மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தூதரக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்த இரண்டு நாள்களில் சுமார் 7 ஆயிரத்து 400 மாணவர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீட்புப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பல இந்திய மாணவர்கள் மீது ரஷ்யா மற்றும் உக்ரைன் வீரர்களால் மட்டுமல்லாமல் போலந்து, ருமேனியா எல்லை களிலும் தாக்குதலுக்குள்ளாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.