கீவ்
ரஷ்யப்படைகள் உக்ரைனில் உள்ள அணு உலை மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என உக்ரைன் கூறி உள்ளது.
ரஷ்ய படைகள் உக்ரைனின் பல்கலைக்கழகங்கள், காவல்துறை அலுவலகங்கள், அரசுக் கட்டிடங்கள், மருத்துவமனைகள் என அந்நாட்டின் உட்கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குதலைக் கடந்த 2 நாட்களாக நடத்தி வருகின்றன. இந்நிலையில், பொது மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் தாக்குதலை நடத்தும் ரஷ்யா மீது போர்க்குற்ற விசாரணையை ஐ.நா. தொடக்கியுள்ளது.
தங்களுக்குத் தடைகள் எத்தனை தொடர்ந்தாலும் திட்டமிட்டபடி தாக்குதல் நடக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சியில் பேசும் போது உக்ரைன் மீதான தாக்குதல் திட்டமிட்டபடி தொடரும் எனக் கூறியுள்ளார். உக்ரைனில் ரஷ்யப் படைகள் நாஜிக்கள் ஆதரவாளர்களை அழித்துக் கொண்டிருக்கிறது என்றார்.
உக்ரைன் மீது தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ள ரஷ்யப் படைகள் அங்குள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இது ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய அணுஉலை எனக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை அணுஉலை அமைந்துள்ள ஜேப்போரிஜியா பகுதிக்கு அருகாமையில் உள்ள நகரத்தின் மேயர் உறுதி செய்துள்ளார். அணுஉலையின் இயக்குநர் ஆண்ட்ரெய் டுஸ் இது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ரஷ்யப் படைகள் அணுஉலை மீது தாக்குதல் நடத்தியுள்ள காடசிகள் உள்ளன .
அவர் இப்போதைக்கு கதிர்வீச்சு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் இயங்குகின்றன என்றாலும் அணுஉலையில் பற்றி எரியும் தீயை அணைக்கவிடாமல் உக்ரைன் தீயணைப்பு வீரர்களை ரஷ்ய படையினர் சுட்டுக் கொன்றனர் எனவும் அணுஉலை மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.