பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, ஆர்யன் கான் மீதான குற்றத்தை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கூறியிருக்கிறது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் பயணம் செய்த ஆர்யன் கான் போதை மருந்து உட்கொண்டதாகக் கூறி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கப்பலில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியின் போது சமீர் வான்கடே தலைமையில் நடைபெற்ற சோதனையில் 21 கிராம் போதைப் பொருள் , 1.33 லட்ச ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியதை அடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழு இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆர்யன் கான் போதை மருந்தை வைத்திருந்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. சோதனை நடத்த செல்லும் அதிகாரிகள் தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து வீடியோவில் பதிவிட வேண்டும் என்று வழிகாட்டு நடைமுறையில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரி சமீர் வான்கடே அதுபோல் வீடியோ எதுவும் பதிவு செய்யாதது முதல் தவறு என்று குறிப்பிட்டுள்ளது மேலும் போதை மருந்து உட்கொண்டிருந்தார் என்பதற்காக அவரது செல்போன் தகவல்களை ஆராய வேண்டிய அவசியம் இல்லை.
இருந்தபோதும், ஆர்யன் கானின் செல்போனில் அவர் போதை மருந்து கடத்தியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
தவிர பலரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதை மருந்தை ஒரே இடத்தில் இருந்து பறிமுதல் செய்ததாக கூறப்பட்டுள்ளதும் ஆட்சேபத்திற்கு உரியது.
இதனால் இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரி சமீர் வான்கடே-விடம் மேலும் விசாரணை நடத்தப்படும் என்றும், தற்போது வரை நடைபெற்றுள்ள விசாரணையில் ஆர்யன் கான் மீதான போதை மருந்து வழக்கில் வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.