சென்னை: தமிழக பத்திரப்பதிவு துறை வரலாற்றில் முதன்முறையாக ரூ.12,096 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.10,643 கோடி மட்டுமேகிடைத்த நிலையில் நடப்பாண்டில் மேலும் உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக துறையைச் சேர்ந்த  உயர்அதிகாரிகள் கூறியுள்ள னர்.

 

தமிழ்நாட்டில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, நிலங்கள் உள்பட பல்வேறு தொழில் சம்பந்தமான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுக்கு குறைந்த பட்சம்  25 லட்சம் ஆவணங்கள் வரை பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறிய அதிகாரிகள், கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பத்திரப்பதிவுகள் குறைந்ததால், வருமானமும் குறைந்தது. ஆனால், இந்த ஆண்டு வரலாறு காணாத சாதனை நிகழ்ந்துள்ளது.

பத்திரப்பதிவுகள் மூலம்  கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.13ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.10,643 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. ஆனால், 2021-22ம் ஆண்டில் திமுக அரசு எடுத்த நடவடிக்கை, மற்றும்,  பத்திரம்பதிவு செய்த அன்றே பத்திரங்கள் திருப்பி தரப்பட வேண்டும் என்றும்,, நிலுவையில் உள்ள ஆவணங்களை குறைப்பு உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் நடவடிக்கைள் பதிவுத்துறை ஐஜி சிவன் அருளால் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக நடப்பாண்டில் பதிவுத்துறை  மூலம் வரலாறு காணாத அளவில் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரை ரூ.12096.36 கோடி வருவாய் எட்டியுள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனையை பதிவுத்துறை படைத்துள்ளது.

இந்நிலையில் இன்னும் 30 நாட்கள் உள்ள நிலையில் ரூ.13 ஆயிரம் கோடி வரை வருவாய் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பதிவுத்துறை வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை தொடுவதாக இருக்கும் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.