திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் என்னென்ன தெரியுமா?
திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் பற்றிய பதிவு
அகோபிலம் என்றால் பானகம்!
இங்கு லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை இருந்தாலும் மிளகு தோசைக்கே வரவேற்பு அதிகம். இந்த தோசைகள் பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டிருக்கும். அதில் எண்ணெய் பொடி சேர்த்துக் கொடுக்கின்றனர். இதைக் குழந்தைகள் விரும்பி உண்பதால் தோசைப் பெருமாள் கோவில் என்று செல்லமாகக் குறிப்பிடுகின்றனர்.
மண் உருண்டை பிரசாதம்!
திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அப்பம், அரவணை, நெய், லட்டு ஆகியவற்றைப் பிரசாதமாகத் தரும் கோயில்கள் உண்டு. ஆனால், கடன் தொல்லை தீர வேண்டும் என்பதற்காக மண்சாந்து உருண்டையை ராமநாதபுரம் அருகே திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தருகின்றனர். இங்குள்ள வில்வ மரத்தின் கீழ் உள்ள மண்சாந்தை உருண்டையாக உருட்டித் தருகின்றனர். இதைச் சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால் கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.
புற்று மண் பிரசாதம்
தூக்கணாங்குருவிக்கூடு, சிலந்தி வலை, புற்று இவற்றை மனிதன் அவ்வளவு எளிதாக உருவாக்கி விட முடியாது. புற்று என்பது வழிபடத்தக்க ஒரு உருவம். கும்பாபிஷேக நாளில் மிருத்ஸங்க்ரணம் என்ற கிரியைக்குப் புற்று மண் தேவைப்படுகிறது. புற்றுமண், துளசிச் செடி மண், வில்வமரத்தடி மண் இவை புனிதமானவை. மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், திருவொற்றியூர், திருவேற்காடு போன்ற தலங்களில் புற்று மண் பிரசாதம் தரப்படுகிறது.
வரட்டி சாம்பலே பிரசாதம்!
மயிலை முண்டகக் கண்ணி அம்மன் கோயிலில், ஆடிமாதம் பொங்கல் (ஏதாவது ஒரு வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில்) வைப்பது மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
அன்று பொங்கல் வைக்க உபயோகப்படுத்தப்படும் வரட்டியின் சாம்பல் விபூதிப் பிரசாதமாகத் தரப்படுகிறது.
எலுமிச்சை சாறு பிரசாதம்!
பொதுவாக அம்மன் கோயில்களில் எலுமிச்சம்பழங்களைத்தான் பிரசாதமாகத் தருவர். சிவகங்கை மாவட்டம், மடப்புறம் காளி கோயிலில் அம்பாளுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சை அனைத்தும் பிரசாதமாகத் தரப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஏகவுரி அம்மன் கோயிலில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு எலுமிச்சை சாற்றைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இதைப் பருகினால், கர்ப்பமாவார்கள் என்பது ஐதீகம்.
பச்சிலை பிரசாதம்!
பொள்ளாச்சியிலிருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆனைமலை மாசாணியம்மன் ஆலயம். நெற்றியில் சக்கரத்துடன் சயன நிலையில் அம்மன் அருளும் இந்த ஆலயத்தில், பச்சிலை பிரசாதம் விசேஷம். இது, பெண்களுக்கான உடற்பிணிகள், வயிறு தொடர்பான நோய்களை நீக்கும் வல்லமையானது என்பர். தை அமாவாசையில் வழிபட வேண்டிய தலம் இது!