டெல்லி: டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவன புதிய தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை ஏற்க இல்கர் ஐசி மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் வாங்கிய நிலையில், அதில் பல்வேறு நிர்வாக ரீதியிலான மாற்றங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி நியமனம் செய்யப்படுவதாக டாடா நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது.
இல்கர் ஐசி ஏற்கனவே துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர். மேலும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.. இதுமட்டுமின்றி துருக்கி அதிபர் எர்டோகனுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்துள்ளார்.
அவரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்த டாடா குழுமம், அவர் ஏப்ரல் 1-ம் தேதி பொறுப்பேற்பார் என கூறியிருந்தது.
இந்த நிலையில், அவர் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘‘ஏர் இந்தியாவின் தலைமை அதிகாரி பதவியை ஏற்றுக்கொள்வது சாத்தியமானது அல்லது கெளரவமான முடிவாக இருக்காது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
துருக்கியை சேர்ந்த அதிகாரியை ஏர்இந்திய நிறுவனத்துக்கு தலைவராக நியமிக்கக்கூடாது என ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.