டெல்லி: உக்ரைன்மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஆபரேசன் கங்கா என்ற பெயரில் சிறப்பு விமானங்களை அனுப்பி மீட்டெடுத்து வருகிறது.  அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் 7 விமானங்களை இயக்க  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று 5வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் கடும் குளிரிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

உக்ரைனில் இந்திய மாணவர்கள் உள்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள்  சிக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்தியஅரசு  தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  உக்ரைனில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. அவ்வப்போது அங்குள்ள  இந்தியர்களிடையே பேசி, பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இரவு, பகல் பாராமல் வெளியுறவுத்துறை அதிகாரிகள், உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.  தொடர்ந்து எல்லைப்பகுதிகளில் உள்ள அண்டை நாடுகளுடன் பேசி, இந்தியர்களை அங்கு வரவழைத்து, பின்னர் விமானம் வழியாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதன் பயனாக தற்போது வரை நான்கு விமானங்கள் மூலம் சுமார் 907 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.  இதையடுத்து,  அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 4 ஏர் இந்தியா, ஒரு இண்டிகோ விமானம் ருமேனியாவின் புகாரெஸ்ட் செல்ல உள்ளதாகவும், தலா ஒரு ஏர் இந்தியா, ஒரு இண்டிகோ விமானம் ஹங்கேரியின் புடாபெஸ்ட்க்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ் நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சண்டை தீவிரமாக உள்ளதால் இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், இந்த சூழலில் வெளியே செல்வது பாதுகாப்பானது அல்ல என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், இந்தியர்கள் ரயில் நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென்றும், ஊரடங்கு ரத்து, பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் நேரத்தில் ரயில் நிலையங்களுக்கு செல்லலாம் என்று இந்தியர்களுக்கு, இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.