சேலம் மாவட்டம் மேட்டூர் அருகில் உள்ள மேச்சேரியில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது.
இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
சமீபத்தில் இந்த கோயில் கருவறைக்கு அருகில் நின்று பத்ரகாளி அம்மனை வீடியோ எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோயில் கருவறைக்குள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது இந்து அறநிலையத்துறையால் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இத்திருக்கோயிலின் செயல் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நூறாண்டுகால பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதாகவும், இத்திருக்கோயில் குறித்த விவரங்கள் அடங்கிய முகநூல் பக்கத்தை மட்டும் சுமார் 40,000 க்கும் மேற்பட்டவர்கள் பின்பற்றி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்ட பக்தர்கள்.
திருக்கோயில் குறித்த விவரங்கள் மற்றும் படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட தடை விதித்திருப்பதால், நாற்பதாயிரம் பேரை பின்தொடர்பவர்களாக கொண்ட இந்த முகநூல் பக்கத்தையும் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேச்சேரி பத்ரகாளி அம்மன் போன்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டுக்கு உரிய தலத்தின் இணைய தளங்களை இந்து சமய அறநிலையத்துறையே ஏற்று பக்தர்களின் வசதிக்காக இணையதள தகவல்களை வழங்க ஏற்பாடு செய்யவது சிறந்ததாக இருக்கும்.