சென்னை: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் டார்ச் லைட்,  முற்றிலுமாக அணைந்து போனது.  அரசியல் மற்றும் சினிமா என இருபுறமும் கால்வைத்துக்கொண்டு, தமிழ்நாடு மக்களை குழப்பி வந்த நடிகர் கமல்ஹாசன் இன்று தமிழ்நாடு மக்களால் முழுமையாக ஓரங்கப்பட்டு உள்ளார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி  தமிழ்நாட்டில் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகம் விற்பனைக்கு அல்ல என்ற கோஷத்துடன் அரசியல் என்ற சாக்கடைக்குள் இறங்கியவர் நடிகர் கமல்ஹாசன். சாக்கடையை சுத்தம் செய்யப்போவதாக கூறிக்கொண்டு, காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தற்போது 5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிலையில், தமிழக மக்கள் அவரது கட்சியை முழுமையாக புறக்கணித்துள்ளது, அவரை மக்கள் எந்த இடத்தில் வைத்திக்கின்றனர் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.

ஆனால், அவர்,  தமிழகத்தைச் சீரமைக்கவேண்டும். உலகளவில் சிறந்த மாநிலமாக மாற்றவேண்டும். தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். தமிழக வளங்களைப் பாதுகாக்க வேண்டும். சமத்துவமும் சமூகநீதியும் ஓங்கவேண்டும் எனும் லட்சியக் கனலோடும் உங்கள் வாழ்த்துக்களோடும் 5-வது ஆண்டில் நுழைகிறோம். நாளை நமதே என்று கூறி தனக்குத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

தமிழகத்தில்  பிப்ரவரி 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவானது நடைபெற்றது. அதன்படி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்ரில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்,  வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு, அவரது கட்சியினர் களத்தில் புகுந்தனர். ஆனால், மக்கள் அவர்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்து விட்டனர் என்பது வாக்கு எண்ணிக்கை முடிவடையும்போதுதான் தெரிய வந்துள்ளது.

தான் பேசுவது என்னவென்பதே புரியாத அளவுக்கு பேசி தமிழ்நாட்டு மக்களை குழம்பி வந்தவர்களில்  முதன்மையானவர் நடிகர் கமல்ஹாசன் என்பது அனைவரும் அறிந்ததே.  பல நேரங்களில் அதிமேதாவித்தனமாக ஏதாவது கூறி, அதற்கு கடுமையான பதிலடிகளையும் பெற்றவர். 90களில் பிரபலமான நடிகர்களாக இருந்தவர்கள் ரஜினி, கமல் என்பது அனைவருக்கும் தெரியும். இருவரும், தங்களது ரசிகர்களை ஏமாற்றி படத்தை தியேட்டர்களில் ஓட்டுவதிலேயும், அதை வைத்து கல்லா கட்டு வதிலேயே குறியாக இருந்து வந்தனர்.

திரையுலகில் இருந்து தாங்கள் ஓய்வுபெறும் வயதில் அரசியல் கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்து, தனது ரசிகர்களை பகடைக்காயாக பயன்படுத்தி ராஜபோக வாழ்க்கை வாழ நினைத்தவர்கள். ஆனால், உடல்நிலை பாதிப்பு காரணமாகவும், எதிர்மறையான விமர்சனங்களாலும்  ரஜினி, அரசியலே வேண்டாம் என்று கையெடுத்து கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிட்டார்.

ஆனால், நடிகர் கமலோ, நான் ரஜினிமாதிரி இல்லை என்று கூறிக்கொண்டு அரசியலுக்குள் கால் பதித்தார். ஆனால் ஆண்டுகள் 5 ஆன நிலையில், அவரால் ஒரு பதவியைக்கூட பிடிக்க முடியாத அவலநிலைதான் தொடர்கிறது. இதற்கிடையில், அவரது கட்சிக்காக பணத்தை வாரி இறைந்த பல பெருந்தலைகள், மாற்றுக் கட்சிகளுக்கு ஓடிவிட, இவரும் பிக்பாஸ், படத்தயாரிப்பு என பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது  ஏதாவது ஒரு கருத்தை கூறிக்கொண்டு, தான் இன்னும் களத்தில்தான் இருக்கிறேன் என்பதை மக்களிடையே ஞாபகம்படுத்திக்கொண்டிருக்கிறார்.

கடந்த 2013ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, விஸ்வரூபம் படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுவதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். ஆனால், பின்னர் சில ஆண்டுகள் குறித்து, நான் நாட்டை விட்டுபோனால் உங்களுக்கு அவமானமில்லையா என்று எதிர்கேள்வி எழுப்பி, மக்களை குழப்பினர். 

தசவாதாரம் படத்தை போன்று பல தாரங்களை கொண்ட நடிகர் கமல்ஹாசன், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதியும். ஜெயலலிதா இறந்த நிலையில், தமிழ்நாட்டில் எழுந்துள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பப் போவதாக கூறிகொண்ட கமலை, தமிழக மக்கள் வெறும் குப்பை பேப்பராக கசக்கி தூங்கி எறிந்துவிட்டனர்.

2017ஆம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தபோது, நடப்பு அரசியலைக் குறித்தும் சிலவற்றைப் பேசினார். அதிமுக, திமுக என இரு கட்சிகளையும் விமர்சித்து வந்தார்.  இது கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்தது. ஆளும் கட்சி ஊழல் புகார்களைச் சுமத்தினார். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்து விட்டதாகவும, அ.தி.மு.க, தி.மு.க. இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான். அந்தக் கட்சிகளின் ஊழல் பொதியை நாங்கள் சுமக்க முடியாது” என்று குற்றம் சாட்டினார்.

அதன்பிறகே கடந்த 2018ம் ஆண்டு கட்சியை தொடங்கியவர், 2019ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், இந்த தேர்தலில் அவரது கட்சி வேட்பாளர்கள் நல்ல வாக்குகளை பெற்றிருந்தனர்.சுமார் 15 லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இதனால் கமல்ஹாசனுக்கு மக்களிடையே செல்வாக்கு உள்ளது என்று கூறப்பட்டது.

ஆனால், கமல்ஹாசனின் பேச்சுக்கள், பேட்டிகள், அறிவிப்புகள் போன்றவற்றை பார்க்கும்போது,  கொள்கை அடிப்படையில் கமல் நிலையானவர் அல்ல என்பது புரிய வருகிறது. அரசியல் விமசர்கள் மற்றும் பொதுமக்களும், கமலின் கொள்கை குறித்து கடுமையாக விமர்சித்தே வருகின்றனர்.

சில சமயங்களில் பெரியாரை புகழ்வார், திராவிட கட்சிகளை விமர்சனம் செய்வார், சில இடங்களில் இடதுசாரி சிந்தனையுடன் பேசுவார், இந்துத்து வாக்களையும் விமர்சிப்பார். அதே நேரத்தில், கருப்புக்குள் காவியும் அடக்கம், தேவைப்பட்டால் பாஜகவுடனும் கூட்டணி அமைப்பேன் என இடத்திற்கு தகுந்த மாதிரி பச்சோந்தியாக அவர் கலர் மாறுவது மக்களிடையே அவர்மீது அதிருப்தியையே வளர்த்து வந்தது.

கமல் கட்சியின் கொள்கை என்ன என்பது இதுவரை ஒருவருக்கும் புரியவில்லை. கட்சியை தொடங்கியபோது, “என்னுடைய கொள்கை இடதுமல்ல, வலதுமல்ல, மையத்தில் இருப்போம்” என்றார். அவரது கொள்கை எதனை அடிப்படையாக கொண்டுள்ளது என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. அதன் பொருள் பலருக்கும் இன்றுவரை விளங்கவில்லை.  அவருக்காவது தெரியுமா என்பதும் கேள்விக்குறியே… 

இருந்தாலும் 2019ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்கு சதவீதத்தை பெற்றது. இதனால் கமலுக்கு அரசியலில் எதிர்காலம் பிரகாசமாக உள்ள என சிலர் புகழாரம் சூட்டினர். ஆனால், அவரால் மக்களிடையே கலந்து, அவர்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்துகொள்ள முடியாது என்பது, அவரை நன்கு புரிந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். தேர்தல் பிரசாரத்தின்போதே, ஏசி பொருத்தி வாகனம் இல்லை என்று கூறி, பிரசாரத்தை பாதியிலேயே விட்டு விட்டு ஓடியவர்தான் இந்த கமல்ஹாசன்.

இவருக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்ற காத்துக்கொண்டிருந்த மக்கள்,  கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் அவரை முற்றிலுமாக புறக்கணித்தனர். இந்த தேர்தலில்  போட்டியிட்ட கமல் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டின் கிராமப்புற மக்கள் நடிகர் கமல்ஹாசனை ஒரு அரசியல் கட்சி தலைவரான அங்கீகரிக்கவில்லை என்பது தெரிய வந்தது.

அதுபோலவே தற்போது நடைபெற்று முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களைத் தொடர்ந்து மாநகரம், நகரம் மற்றும் பேருராட்சி பகுதிகளைச் சேர்ந்த மக்களும், நடிகர் கமல்ஹாசன், நடிகராகவே தொடரட்டும், அரசியல் கட்சியின் தலைவராக தொடரத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது கட்சிக்கு மாபெரும் தோல்வியை பரிசாக கொடுத்துள்ளனர்.

இதே கமல்தான் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஆனந்தவிகடன் இதழுக்கு அளித்த பேட்டியில்,  “தான் அரசியலுக்குப் பொருத்தமானவரில்லை” என்றும், பின்னர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போதும், “அரசியலுக்கு வர மாட்டேன் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன்” என்று பதிலளித்திருந்தார்.

தமிழ்நாடு மக்கள்  தற்போது அதை மீண்டும்  நினைவுபடுத்தி உள்ளனர். புரிந்துகொண்டால் சரி..