சென்னை

சென்னை மயிலாப்பூர் கிளப் அறநிலையத்துறைக்கு ரூ.4 கோடி வாடகை பாக்கி வைத்திருந்ததால் அந்த கட்டிடத்துக்குப் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மனைகளில் வாடகைதாரர்களுக்கு இந்து அறநிலைய சட்ட விதிகளின் படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது.  இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான மனைப் பரப்பில் மயிலாப்பூர் கிளப் செயல்பட்டு வருகிறது. 

இந்த கிளப் நிர்வாகத்தினர் புதியதாக நிர்ணயம் செய்யப்பட்ட வாடகையைச் செலுத்தவில்லை.  இதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனால் மயிலாப்பூர் கிளப் நிர்வாகத்தினர் வாடகை நிலுவைத்தொகையில் ஒரு பகுதியாக ரூ.1 கோடிக்கான காசோலையைக் கோவில் நிர்வாகத்தினரிடம் வழங்கினார்கள்.

ஆனால் இந்த ஆண்டு ஜனவரி31 ஆம் தேதி வரை மயிலாப்பூர் கிளப் செலுத்த வேண்டிய வாடகைத் தொகை ரூ.4,07,86,731 ஆகும்.   இவ்வளவு தொகை நிலுவையில் உள்ளதால் இந்து அறநிலையத்துறையால் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டிடம் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.