சி.பி.எஸ்.இ., என்.ஐ.ஓ.எஸ். மற்றும் பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் பயின்ற 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொதுத் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிபதி ஏ.எம். கன்வில்கரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வழக்கறிஞர் பிரசாந்த் பத்மநாபன் கோரிக்கை வைத்தார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு நேரடி வகுப்புகள் பெருமளவு நடத்தப்படவில்லை என்ற நிலையில் பொதுத் தேர்வுகளை நேரடியாக நடத்துவது மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்றும் நேரடி தேர்வு இல்லாமல் மாற்று மதிப்பீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பொதுத் தேர்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அனைத்து மாநில கல்வித் துறை மற்றும் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு முன் நகல் அனுப்பி வழக்கு தொடர்பாக அறிவிக்க கோரிய நீதிபதி, இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.