ஜெனிவா

ன்று ஐநா பாதுகாப்புக் குழு உக்ரைன் தொடர்பாக அவசர கூட்டம் நடத்த உள்ளது.

நீண்ட காலமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.   உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுமே முதலில் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்தன.  இந்நிலையில் உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக் கூடாது என்னும் ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்ததால் மோதல் மேலும் வலுவாகி உள்ளது.

உக்ரைனில் தாக்குதல் நடத்த ஏதுவாக தற்போது ரஷ்யப்படைகள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன.   உக்ரைன் அதிபர் விலோடிமேர் ஜெலன்ஸ்கி கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்தார்.  ஆனால் இதற்கு ரஷ்ய அதிபர் எவ்வித பதிலையும் தெரிவிக்காமல் உள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போரைத் தவிர்த்து விட்டு பேச்சு வார்த்தைக்கு வர ரஷ்ய அதிபருக்கு அழைப்பு விடுத்தார்.   இதையொட்டி விரைவில் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் சந்திப்பு நடைபெறும் என வெள்ளை மாளிகை அறிவித்தது.  நேற்று திடீரென கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்கள் தனி நகரங்களாக அறிவிக்கப்படும் என ரஷ்ய அதிபர் அறிவித்துள்ளார்.

எனவே இங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  மேலும் உக்ரைனில் ரஷ்யா வசம் உள்ள பகுதிகளுக்கு அமெரிக்க அதிபர் பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளார்.  ரஷ்யாவின் போக்கை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் குழு உடனடியாக அவசர கூட்டம் நடத்த வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன.  இந்த கோரிக்கையை ஏற்ற ஐநா பாதுகாப்புக் குழு இன்று உக்ரைன் விவகாரம் தொடர்பாக அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.