வரும் 27ம் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் நடக்கிறது. இதில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிடுகிறது. எதிர்த்தரப்பில் ஆர்.கே.செல்வமணி தரப்பினர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று இயக்குனர் சங்க தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை விருகம்பாக்கத்தில் இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்டார்.

பின்னர் மேடையில் பேசிய அவர், “விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தின் கதை பிரச்சினைக்கு உள்ளானது. அந்தக் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ராஜேந்தர் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதன் தலைவர் என்ற முறையில் அவரது புகாரை பரிசீலனை செய்தேன்.

முருகதாஸிடமும் கதை கேட்டேன்.

 

இரண்டும் ஒரே மாதிரி இருந்தன. தவிர ராஜேந்திரன் தான் முதலில் பதிவு செய்திருக்கிறார். ஆகவே அவர் பக்கமே நியாயம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

அதே நேரம் எனது முடிவே இறுதியானது என அறிவிக்க விரும்பவில்லை. அது ஜனநாயகம் அல்ல.

பன்னிரண்டு பேர் கொண்ட குழு அமைத்து அனைவரின் கருத்தையும் கேட்டேன்.

அதில் ஒருவரான – எழுத்தாளர் சங்க துணை தலைவரான – ஆர்.கே. செல்வமணி, “இரண்டும் வேறு வேறு கதை” என்றார். அவரக்கு ஆதரவாக சிலரும் அப்படியே கூறினர்.

ஆனால், பெரும்பாலானவர்கள், “இரண்டும் ஒரே கதைதான். ஆகவே உதவி இயக்குநர் ராஜேந்திரனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்றனர்.

அதுவே மினிட் புக்கில் பதிவானது.

ஆனால் திடீரென சர்கார் பட இயக்குநர் முருகதாஸ், “எனது கதைதான் என மெஜாரிட்டியாக இருந்தும், பாக்யராஜ், தவறான தீர்ப்பு கொடுத்துவிட்டார்” என்றார்.

காரணம், மினிட் புக்கை திருத்தி, முருகதாஸுக்கு ஆதரவாக பலர் இருப்பதுபோல மாற்றியிருக்கிறது ஆர்.கே.செல்வமணி குரூப். இது போர்ஜரி இல்லையா?

ஆனால் அன்று நடந்த விசயத்தை அப்படியே டேப்பில் பதிவு செய்திருந்தேன். அது வழக்கமான ஒன்று. அந்த டேப் என்னிடம் இருந்தது.

அதன் பிறகே ராஜேந்தினுக்கு நியாயம் கிடைத்தது.

ஆனால் முழுமையான நியாயம் கிடைக்கவில்லை.

எழுத்தாளர் சங்கம் ஒரு முடிவை எடுத்த பிறகு, பெப்சி தலைவர் என்ற முறையில் ஆர்.கே. செல்வமணி இன்னொரு பஞ்சாயத்து நடத்தினார். ராஜேந்திரனை அழைத்து பேசினார். இறுதியில் ராஜேந்திரனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை” என்றார் கே.பாக்யராஜ்.