சென்னை
நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் 60.70% வாக்குகளும் சென்னையில் 43.69% வாக்குகளும் பதிவாகி உள்ளன.
நேற்று தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. நேற்றைய தேர்தலில் சுமார் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. சென்னையில் மிகக்குறைந்த அளவாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னை மாவட்டத்தில் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளும், மூன்று மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. நடந்து முடிந்த தேர்தல்களில் 50 சதவீதத்தை தாண்டியே வாக்குப்பதிவாகியுள்ளது. அதாவது கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 52.67 சதவீத வாக்குகளும், அதே ஆண்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகரத்தந்தைக்கான வாக்குப் பதிவில் 52.67 சதவீத வாக்குகளும் பதிவாகின.
அதைப் போல் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 59.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகிய நிலையில், நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகக்குறைந்த அளவாக 43.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்குள் பதிவான வாக்குகளில் மிகவும் குறைந்த சதவீதமாகும்.
இதற்குக் காரணம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைப் பதிவு செய்வதற்கான நோட்டா வசதி இல்லாததே எனக் கூறப்படுகிறது.