சென்னை: மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாலை 3மணி நிலவரப்படி, 47.18 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. படித்தவர்கள் அதிகம் வசிக்கும் கிரேட்டர் சென்னையில் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகி உள்ளது விவாதப்பொருளாகி உள்ளது.
அரசியல்கட்சியில் அறிவித்துள்ள வேட்பாளர்கள் மீதான வெறுப்பா அல்லது ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில் 2 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஆனால், 50 சதவிகிதம் அளவினரே வாக்குகளை செலுத்தி உள்ளனர்.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 35.34 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநகராட்சிகளில் 28.50 சதவீதமும், நகராட்சிகளில் 41.13 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. பேரூராட்சி பகுதிகளில் 46.92 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 23.42 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த நிலையில், மாலை 3மணி வரையில் சராசரியாக 47.18% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிகவும் குறைந்த பட்ச வாக்குகளே பதிவாகி உள்ளன. அதாவது, மாலை 3மணி நிலவரப்படி, 32.09% வாக்குகளே பதிவாகி உள்ளன