தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய காட்டுமிராட்டித்தனமான துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி, அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷனின் விசாரணை இன்றுடன் முடிவடைகிறது.
இந்த ஆணையம் இதுவரை 36-வது கட்டமாக விசாரணை நடத்திய நிலையில், விசாரணை முடிவடைந்த நிலையில், ஆணையத்தின் இறுதி அறிக்கை ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, துப்பாக்கி சூடு, தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது இதுவரை 35 கட்ட விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், 36-வது கட்ட கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி பீச் ரோடு விருதுநகர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஆணைய அதிகாரி அருணாஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். இதில் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் ஏ.டி.ஜி.பி.விஜயகுமார், முன்னாள் டி.ஜி.பி.ராஜேந்திரன், முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, முன்னாள் பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார், சி.பி.ஐ. டி.எஸ்.பி.ரவி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து, 36-வது கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் விசாரணை இத்துடன் நிறைவு பெற்றதாக கூறப்பட்டுள்ளது. பின்னர் ஏப்ரல் மாதம் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.