கொழும்பு
இலங்கை மற்றும் தமிழக பக்தர்களுக்குக் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு தற்போது இலங்கைக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அது ஒரு காலத்தில் இந்திய நாட்டின் பகுதியாக இருந்தது. இங்கு வருடா வருடம் நடைபெறும் அந்தோணியார் திருவிழாவுக்குத் தமிழக மீனவர்கள் சென்று வழிபடுவது வழக்கமாகும். அந்த விழாவில் இலங்கை மீனவர்களும் கலந்துக் கொள்வார்கள்.
கச்சத்தீவு தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதாலும் மேலும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவதாலும் பிரச்சினைகள் உள்ளன. இதையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக பக்தர்களை கச்சத்தீவு திருவிழாவுக்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
விழாவுக்கு யாழ் மாவட்ட நிர்வாகம் 500 பக்தர்களை அனுமதிக்கலாம் என தீர்மானித்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “இலங்கை, இந்தியா ஆகிய இரு நாட்டு பக்தர்களும் கச்சத்தீவு திருவிழாவுக்கு அனுமதிக்கப் போவதில்லை.
இந்த முறை அருட்தந்தைகள் பங்கேற்புடன் மட்டும் திருவிழாவை நடத்த இலக்கை அதிபர் தீர்மானம் செய்துள்ளார். ஆகவே இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்குக் கச்சத்தீவு திருவிழாவுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.