ஜனநாயக அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை மேற்கோள்காட்டி பேசினார்.
இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குரியன் மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு ஆகியோர் தங்கள் நாடுகளை சுதந்திரத்திற்கு இட்டுச் சென்ற “மகத்தான மற்றும் ஆற்றல் மிகுந்த தலைவர்கள்” என்றும் பின்னர் பாராளுமன்ற ஜனநாயகத்தை நடத்துவதற்கான முன்மாதிரியான விதிமுறைகளையும் நடைமுறைகளையும் நிறுவியதற்காகவும் லீ சியென் லூங் பாராட்டினார்.
மகத்தான தனிப்பட்ட கௌரவத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் ஒரு துணிச்சலான புதிய உலகத்தை உருவாக்குவதற்கும், தங்கள் மக்களுக்கும் தங்கள் நாடுகளுக்கும் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் தங்கள் மக்களின் அதிக எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முயன்றனர். ஆனால் அந்த ஆரம்ப உத்வேகத்தையும் உந்துதலையும் தக்கவைத்துக்கொள்ள அடுத்தடுத்த தலைமுறைக்கு பெரும்பாலும் கடினமாக உள்ளது” என்று லீ கூறினார்.
ஜனநாயகத்தைக் காப்பதும் அதன் கட்டமைப்பை வலுப்படுத்துவதும் அடுத்தடுத்த தலைமுறையின் கடமை என்றும் கூறினார்.
“அரசியலின் அமைப்பு மாறுகிறது, அரசியல்வாதிகள் மீதான மரியாதை குறைகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் சிறப்பானதை எதிர்பார்க்க முடியாத வாக்காளர்கள் இதுதான் விதி என்று நினைக்கிறார்கள். அதனால், தரநிலைகள் சீரழிந்து, நம்பிக்கை சிதைந்து, நாடு மேலும் வீழ்ச்சியடைகிறது” என்று அவர் மேலும் கூறினார்.
“இன்றைய பல அரசியல் அமைப்புகள் அவற்றின் ஸ்தாபகத் தலைவர்களால் அடையாளம் காண முடியாததாக இருக்கிறது. பென்-குரியனின் இஸ்ரேல் இரண்டு ஆண்டுகளில் நான்கு பொதுத் தேர்தல்கள் நடந்த போதிலும், ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையில், இஸ்ரேலில் உள்ள மூத்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஒரு கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர், சிலர் சிறைக்கு சென்றுள்ளனர்.
நேருவின் இந்தியா, ஊடக அறிக்கைகளின்படி, அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் உள்ள கிட்டத்தட்ட பாதி எம்.பி.க்கள் மீது கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக” சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் லீ பேசியுள்ளார்.
நேரு குறித்த விமர்சனங்களை பிரதமர் மோடி வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கும் வேளையில் சிங்கப்பூர் பிரதமர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேருவை மேற்கோள்காட்டி பேசிய விவகாரம் பாரதிய ஜனதா கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த விவகாரம் தொடர்பாக சிங்கப்பூர் அரசிடம் விளக்கம் கேட்கவேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர்.